.வடக்கு கிழக்கு செய்திகள்.

2011.09.08

வட பிராந்தியத்தில் காணி உரிமை பதிவு செய்யும் 

விடயத்தில் அதிருப்தியான ஏற்பாடுகள்


வட பிராந்தியத்தில் காணி உரிமையைப் பதிவு செய்வதில் அதிருப்தியான முறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கவலை தெரிவித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக சட்டத்தரணி கந்தையா நீல கண்டன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிப்லி அசீஸுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;
வட பிராந்தியத்திலுள்ள மக்கள் புதிய உறுதிகளுக்கு (காணி) விண்ணப்பிப்பதற்கு கோரிக்கை விடுக்கும் அறிவித்தலொன்றை காணி அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ளது. இந்த அறிவித்தல் தொடர்பாக தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த விடயம் தொடர்பாக 2011 செப்டெம்பர் 6 இல் (நேற்று) த ஐலன்ட் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தியொன்றையும் இணைத்துள்ளேன்.  உரிமையாளருக்கு புதிய உறுதியை விநியோகிப்பதற்கு முன்பாகக் குறிப்பிடப்பட்ட காணி அளவீடு செய்யப்படும் எனவும் ஒவ்வொரு விண்ணப்பத்தினதும்
உரிமை தொடர்பாக காணி அபிவிருத்தி அமைச்சு உறுதிப்படுத்திக்கொள்ளுமெனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த இணையத்தளமொன்றிலிருந்து தரவு இறக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அடிப்படைத் தகவல் கொண்ட படிவத்தின் பிரதியையும் இங்கு நான் இணைத்திருக்கின்றேன்.
இலங்கையில் காணி உரிமை பதிவுக்குப் பொருத்தமான சட்டம் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆவணங்கள் ஒழுங்கு விதி பதிவுக்கு அமையவே காணி உரிமை பதிவுக்கான சட்டம் பொருந்தக் கூடியதாக இருக்கின்றது. உரிமைப்பத்திர சட்டத்தின் பதிவுச் செயற்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஆவணங்கள் ஒழுங்கு விதிகள் பதிவு செய்தலே பிரயோகிக்கப்படக்கூடியதாக உள்ளது. உரிமைப்பத்திரம் சட்டத்தின் பதிவிலுள்ள பல்வேறு குறைபாடுகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியிருப்பது பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த சட்ட மூலத்தைத் திருத்துமாறு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் அதனைத் திருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பொருத்தமான சட்டத்தின் பிரகாரம் மட்டுமே எந்த காணி உரிமையையும் பதிவு செய்ய முடியும். உறுதிகளை வழங்குவதற்கு காணி காணி அபிவிருத்தி அமைச்சு முனைவதற்கு இயலாது. சட்ட ரீதியான ஏற்பாடுகளைக் கொண்டிராமல் உரிமைப்பத்திரம் குறித்து தீர்மானிப்பதற்கும் காணி உரிமை குறித்தும் எவ்வாறு அவர்களால் தீர்மானிக்க முடியும்.
இதேவேளை, அடிப்படைத் தகவல் படிமமானது குறைபாடுகளைக் கொண்டதாகத் தயாரிக்கப்பட்டிருப்பதை நான் அவதானித்துள்ளேன். உதாரணமாக படிமத்தின் பத்தி 3.3 கீழ் உள்ள கேள்வியில் “எவ்வாறு காணி உரித்து மாற்றப்பட்டுள்ளது என்பது இடம்பெற்றுள்ளது. இதற்குரிய தேர்வான பதிலாக சட்ட முரணான உரித்தாக்கல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட முரணான உரித்தாக்கல் மூலம் எவ்வாறு உரிமையை மாற்ற முடியும். மற்றொரு விருப்பத்திற்கு உரிய பதிலாக ஒழுங்கீனமான கொள்வனவு என்பது காணப்படுகிறது. இதனை விளங்கிக் கொள்ள முடியவில்லை.
யாவற்றுக்கும் மேலாக படிவத்தின் அடியில் உறுதிப்பத்திரத்தின் உறுதிப்படுத்தும் விடயமானது இறுதியில் கிராம அதிகாரியினால் அவதானிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு தீர்மானிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடும் திருப்திகரமற்றதாகும்.
இந்த விடயம் குறித்து காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் கவனத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உடனடியாகக் கொண்டு செல்ல வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன். அத்துடன், இந்த அறிவிக்கப்பட்ட முறைமையை உடனடியாக இரத்து செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சகல குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யக்கூடியதாக உரிமைப்பத்திர சட்ட பதிவில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென அரசாங்கத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்த வேண்டும். அதன் பின்னர் வடபிராந்தியத்திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் சட்ட ரீதியான முறையில் இந்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கந்தையா நீலகண்டன் வலியுறுத்தியிருக்கிறார்.By:Kapilan






2011.09.05
இரவு நேரத்துப் பதற்றம் குடாநாட்டில் தொடர்கிறது; அச்சுவேலியில் வாகனம் மடக்கப்பட்டது.  

 விஷமிகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களினால் யாழ். குடாநாட்டில் ஆங்காங்கே இரவு நேரங்களில் ஏற்படும் பதற்றம் நேற்றும் பல பகுதிகளில் ஏற்பட்டது. பொல்லுகள், தடிகளுடன் பல்வேறு இடங்களிலும் இளைஞர்கள் காவலில் ஈடுபடுவதைக் காணமுடிவதாக எமது செய்தியாளர்கள் அறிவிக்கின்றனர். 

புத்தூர், சிறுப்பிட்டிப் பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் ஓடித்திரிந்து மக்களுக்கு அச்சமூட்டிய வாகனம் ஒன்றை அந்தப் பகுதி இளைஞர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு மடக்கிப் பிடித்தனர். 
கலைமதி கிராமத்தினுள் புகுந்த இந்த வாகனத்தைத் துரத்திச் சென்ற இளைஞர்கள் தாக்குதல் நடத்தி அதனை மடக்கினர் என்று கூறப்பட்டது. இதில் அந்த வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடிகள் நொருங்கின. 
இந்த வாகனத்தில் வந்த சிலர் மூன்று தினங்களாக இரவில் மக்களின் வீடுகளின் கதவுகளைத் தட்டிவிட்டு ஓடிவிடுவர் என்று மக்கள் தெரிவித்தனர். இதனால் மக்கள் மத்தியில் பயமும் பீதியும் ஏற்பட்டிருந்தன. 
இந்த வாகனத்தின் சாரதி சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவர். தமிழராக இருந்த போதும் நன்கு சிங்களம் பேசக்கூடியவர் என்று மக்கள் கூறுகின்றனர். முதல் நாளே இரவு நேரத்தில் இவரை இந்தப் பகுதியில் கண்ட இளைஞர்கள் சிலர் இவ்வாறு தேவையற்று நடமாடவேண்டாம் என்று எச்சரித்தனர் என்றும் கூறப்படுகிறது. 
எனினும் சம்பவதினம், இவருடன் வாகனத்தில் வந்தார்கள் என்று கூறப்படும் நபர்கள் ஊருக்குள் சென்றனர் என்று மக்கள் கூறுகின்றனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது பற்றித் தகவல் இல்லை. 
திங்கள் இரவு இந்த வாகனம் ஊருக்குள் நுழைந்ததும் அதனை மடக்க இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் துரத்தியுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதித் தள்ளிவிட்டுத் தப்ப முயன்ற வாகனம் அவசரத்தில் பிரதான வீதிக்குச் செல்லும் ஒழுங்கை மாறி ஏறியதால் மேற்கொண்டு பயணிக்க முடியாது சிக்கிக் கொண்டதாக ஊரவர்கள் கூறினர். 
வாகனமும் சாரதியும் அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்றிரவு வரை வாகனம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், சாரதி விடுவிக் கப்பட்டார். 
வாகனத்தை மடக்கியபோது விசாரித்ததில் தான் கூலிக்கு வாகனம் ஓட்டும் ஒருவரே தவிர வேறு எதுவும் தனக்குத் தெரியாது என்று சாரதி தெரிவித்துள்ளார். 
வாகனத்தில் இலக்கத்தகடுகள் தெளிவாக உள்ளன. அதனைக் கொண்டு விசாரணை நடத்தி வாகனம் யாருக்குச் சொந்தமானது, அதில் வந்தவர்கள் யார் என்பதைப் பொலி ஸார் கண்டுபிடிக்க முடியாதா? ஏன் அவர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள்?'' என்று கேள்வி எழுப்பினார் ஊரவர் ஒருவர். 
அச்சுவேலிப் பொலிஸாருடன் இது குறித்துத் தொடர்பு கொண்டபோதும் உத்தியோகபூர்வமாகத் தகவல்கள் எதனையும் பெற முடியவில்லை. 
இதற்கிடையே, அச்சுவேலி வடக்குப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவரின் நடமாட்டம் காணப்பட்டதாக நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டது. மக்கள் ஒன்று திரண்டு அவர்களைப் பிடிக்க முயன்றபோதும் அச்சுவேலி வடக்குப் பகுதியில் கிழக்குப்புறமாக உள்ள வயல்வெளிகள் ஊடாக அவர்கள் ஓடி மறைந்தனர் என்று மக்கள் கூறு கின்றனர்.